தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் தமது கடும்போக்கு சிந்தனைகளுக்கான நியாயங்களை முன்வைக்க அல்குரான், சுன்னாவிலிருந்து ஆதாரங்களை காட்டுகின்றனர். அவர்களது ஆதாரம் முன்வைக்கும் இப்போக்கு ‘ஒழுங்குமுறையற்றது’ (Unsystematic) மர்றும் ‘சந்தர்ப்பவாதம் கொண்டது’ (Opportunistic) என காலித் வாதாடுகிறார். அல்குரான், சுன்னாமுதல் மூலதாரம் என்பதில் எந்த முஸ்லிமும் கருத்து வேறுபாடு கொள்வதில்லை. ஆனால்அவற்றை அணூகும் முறைமையில் வித்தியாசமான போக்குகள் காணப்படுகின்றன எனபதை ஏற்கும் காலித், தூய்மைவாத சிந்தனை போக்கு கொண்டோர் அம்மூலாதாரங்களை அணுகுவதில் எவ்வித விஞ்ஞானபூர்வமான முறைமையையும் கைக்கொள்வதில்லை எனவிமர்சிக்கிறார். அவர்களுக்கென்று ஒரு முறைமை இல்லை, அவர்கள் தமது முன்முடிவுகளுக்கு ஏற்ப அக்கருத்தை அல்குரான், சுன்னாவினூடாக பலப்படுத்த விரும்புகின்றனர். எதிரியை தாக்குவதற்கும் தமது ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்தை பலப்படுத்தவுமே மூலாதாரங்களை கைக்கொள்கின்றனர் எனவும் காலித் விமர்சிக்கிறார். ஆதாரங்கள் மீதான அவர்களுடைய அணுகுமுறை அடுத்தவனை தாக்குவதாகவே இருக்கும். அவர்களது ஒட்டுமொத்த செயற்பாடுகளும், ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதாரங்களை வீசி தாக்குதல் என்பதாகவேஇருக்கும் எனவும் கருதுகிறார்.
ஆதாரங்களை அணுகுவதில் அவர்களிடமிருக்கும் சிக்கல்களை விளக்க அவர்கள் பிரயோகிக்கும் ‘நஸ்க்’ (Abrogation) என்ற கருத்தாக்கமே போதுமானதாக இருக்கும். தமது கருத்துக்கு முரணாக அல்குரான் வசனம் அல்லது ஹதீஸ் வரும் போது அவற்றை மன்ஸூஹ் செய்யப்பட்ட வசனம் அல்லது ஹதீஸ் எனக் கூறுகின்றனர். அவர்கள் நாஸிஹ், மன்ஸூஹ்கோட்பாட்டை பக்கச்சார்பாக அணுகுகின்றனர். உதாரணமாக சூரா ஆல இம்ரானின் 85ம் வசனத்தை ஆதாரம் காட்டி அல்குரானில் வரும் அமைதி, சமாதானம், போர் நிறுத்தம், வன்முறைமை தவிர்த்தல், இஸ்லாத்தை ஏற்காதவர்களோடு நல்ல முறையில் நடத்தல் பற்றிவரும் வசனங்களை மன்ஸூஹ் செய்யப்பட்டதாக வாதாடுகின்றனர். அவர்கள் தூது மீதான ஒட்டுமொத்த பார்வையை செலுத்தாமல் தமது ஆதங்கள், ஏமாற்றம், அபிலாசைகளை இறைவசனங்களில் வாசிக்கவும் விளக்கம் கொடுக்கவும் முனைகின்றனர் என காலித் அபூ பழ்ல்கருதுகிறார்.
அல்குரான், சுன்னா மீதான அவர்களது விளக்கத்தில் இன்னோர் சிக்கலும் இருக்கின்றது. அவர்கள் தமது விளக்கத்தை பூஜிக்கின்றனர். அடுத்தவர்களது விளக்கங்களை பிழையாகக்கருதுவதுடன் அவற்றை எக்கட்டத்திலும் கலந்துரையாட விரும்புவதில்லை. தூய்மைவாதசிந்தனை போக்கு கொன்டோர் மூலாதாரங்கள் மீதான தமது வியாக்கியானத்துக்கு இறைவனின் வார்த்தை (Word of God) அளவுக்கு அந்தஸ்த்து கொடுக்கின்றனர். அதனூடாக ‘எதேச்சதிகாரபோக்கு’ (Authoritarian tendency) ஒன்றை கட்டமைக்க விரும்புகின்றனர். இது வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்கள் கட்டி, உருவாக்கிய அறிவுப்பாரம்பரியத்துக்கு முற்றிலும் முரணானபோக்கு கொண்டது என காலித் வாதாடுகிறார். வரலாற்றில் தோன்றிய புத்தக தொகுப்புகள் எண்ணிலடங்காதவை. ஒன்றுக்கொன்று முரன்பட்ட சிந்தனைகள் ஏக காலத்தில் தோற்றம்பெற்றன. ஒருவரை ஒருவர் அங்கீகரித்தனர். முரன்பட்டவர்களோடு உரையாடினர். கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். யாரும் தனது புரிதலை முற்றுமுழுதாக சரியானது எனக்கூறிக்கொள்ளவில்லை. அடுத்தவரது கருத்து, வாசிப்பு, அணுகுமுறை முற்றிலும் பிழையானதுஎன ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. மாற்றமாக அவர்கள் அறிவடக்கத்தை (Intellectual Humility)கைக்கொண்டனர். அவர்கள் தமது சிந்தனை முன்வைப்பின் இறுதியில் ‘அல்லாஹ்வே மிகச்சரியானதை அறிந்தவன்’ என எழுதும் பழக்கம் கொண்டிருந்தனர். அடுத்தவர்களை ஏற்கும் இவ்வறிவடக்க பாரம்பரியத்துக்கு முரனான போக்கையே தூய்மைவாத கொள்கைகொண்டோர் பின்பற்றுகின்றனர் என காலித் கருதுகிறார்.
வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்கள் பின்பற்றி வந்த அடுத்தவர்களை அங்கீகரிக்கும்பன்மைத்துவ சிந்தனைய அவர்கள் உடைத்தெரிய முனைகின்றனர், இஜ்திகாதில் சரியானமுடிவுக்கு இரு நன்மைகளும் பிழையான முடிவுக்கு ஒரு நன்மையும் வழங்கப்படும் எனும்கருத்துக்கு அவர்கள் பிழையான நடைமுறை விளக்கம் வழங்குகின்றனர் எனவும் அவர்கருதுகிறார்.
இறைவனின் பெயரால் பேசுவதற்கு (Speak in the name of God) பேராசிரியர் காலித் ஐந்து நிபந்தனைகளை முன்வைக்கிறார். நேர்மை (Honesty), தொடர் முயற்சி (Diligence), முழுமையான புரிதல் (Comprehensiveness), நியாயத்தன்மை (Reasonableness), சுய கட்டுப்பாடு (Self-restrain) ஆகிய ஐந்து பண்புகளையும் இறைவனின் வார்த்தைகளுக்கு வியாக்யானம் கொடுக்க முனைபவர் பெற்றிருப்பது அவசியமானது. இறைவனின் பெயரால் பேச முனைபவர் கருத்துக்களை திரிபுபடுத்தாத வகையிலும் கருத்துக்களை ஏற்கனவே எடுத்த தனது முடிவுகளுக்கு ஏற்ப வலைக்காத வகையிலும் நியாயமானவராக இருக்க வேன்டும். உண்மையை கண்டுபிடிக்கும் இப்பயணத்தில் தன் முழுமையான சக்தியையும் அறிவாற்றலையும் பிரயோகிக்கக் கூடிய தொடர்முயற்சி கொண்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்டதொரு விடயதானத்தில் அது பற்றிய அல்குரான், சுன்னாவுடைய எல்லா மூல வாக்கியங்களையும் திரட்டி, எந்தவொரு வாக்கியமும் புறக்கணிக்கப்படாத விதத்தில் முழுமையான புரிதலைகொண்டதாக விளக்கம் இருக்க வேண்டும். சில வாக்கியங்களை எடுத்து, இன்னும் சிலதை புறக்கணிக்கும் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. முரண்பாடாக தோன்றும் வாக்கியங்களை விஞ்ஞானபூர்வமாக விளக்குவது அவசியம். விளக்கங்களுக்கு இஸ்லாமிய சட்டவாக்கமுறைமையில் நியாயத்தன்மை காணப்பட வேண்டும். இறுதியாக தான் அடையும் முடிவு இறைவன் கூறியது என உறுதியாக யாராலும் கூறிவிட முடியாது. பிழையாக வியாக்கியானம் கொடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, சுயகட்டுப்பாட்டுடன் ‘இறைவனே மிகச் சரியானதை அறிகிறான்’ என்ற வார்த்தைகளுடன் முடிவுக்கு வருவதே பொறுத்தமானது. இவ் ஐந்து நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று புறக்கணிக்கப்படும் போது அங்கு ‘வியாக்யான சர்வாதிகாரவாதம்’ (Interpretive Authoritarianism) தோற்றம் பெறுகிறது.